×

அமெரிக்காவில் பிளாய்ட் விவகாரம் மறைவதற்குள் அடுத்த சர்ச்சை; மேலும் ஒரு கருப்பின நபரை அடித்து கொன்ற போலீஸ்: வைரல் வீடியோவால் பரபரப்பு

நியூ ஓர்லியன்ஸ்: அமெரிக்காவில் மின்னியாபோலிசில் கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட்டை, போலீஸ் அதிகாரி ஒருவர் கழுத்தில் காலை வைத்து அழுத்தி கொன்ற வைரல் வீடியோ சமீபத்தில் வெளியானது. இதனால், கொரோனா ஊரடங்கால் கடைபிடிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மீறி, நாடு முழுவதும் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பிளாய்ட்டின் உடலும் நேற்றுதான் அடக்கம் செய்யப்பட்டது. இந்த துயரத்தில் அமெரிக்க மக்கள் ஆழ்ந்துள்ள நிலையில், கருப்பினத்தை சேர்ந்த ஒருவரை போலீசார் கடுமையாக தாக்கும் மற்றொரு புதிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அமெரிக்காவின் லூசியானா நகரில் கடந்த ஏப்ரல் 5ம் தேதி டாமி டேலி மெக்ளோதன் (44) என்பவருக்கும், 4 போலீஸ் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெறுகிறது. நான்கரை நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோ காட்சியில் அந்த நபரை 4 போலீசாரும் தாறுமாறாக அடித்து உதைக்கின்றனர். ஒருவர் அவரது முகத்தில் குத்துகிறார். மற்றொரு அதிகாரி தடியால் அடிக்கிறார். பின்னர், அவரது கைகளை கட்டி கீழே தள்ளுகின்றனர். கஷ்டப்பட்டு எழுந்து நிற்கும் அவரை போலீஸ் வாகனத்தை நோக்கி தள்ளுகின்றனர். அப்போது, அவரது தலையில் பலத்த காயம் ஏற்படுகிறது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 6ம் தேதி உயிரிழந்தார்.

அவர் மூச்சு விட சிரமப்பட்டு கொண்டிருப்பதை பார்ப்பதற்கு முன்பாக,  48 நிமிடங்கள் காவல் துறை வாகனத்தில் காற்று வசதி கூட இல்லாமல் கட்டி வைக்கப்பட்டு இருந்துள்ளார். இது தொடர்பாக லூசியானா நகர காவல்துறை அதிகாரி பென் ரேமாண்ட் கூறுகையில், ‘‘மெக்ளோதனை போலீசார் தாக்கியது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார். மெக்ளோதன் தாக்கப்பட்டதும், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்ததும் அமெரிக்காவில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால், புதிதாக போராட்டங்கள் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

விமானப்படை ஊழியர்கள் தலைவராக கருப்பின அதிகாரி
அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் படுகொலையால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்க விமானப்படையின் ஊழியர்கள் பிரிவு தலைவராக கருப்பினத்தை சேர்ந்த சார்லஸ் பிரவுன் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இதற்காக அனுமதியை அமெரிக்க செனட் ஒருமனதாக வழங்கியுள்ளது.

Tags : disappearance ,black man ,United States ,Floyd , next controversy ,United States, disappearance,the Floyd affair; Police attacking, black man, Furious by viral video
× RELATED அமெரிக்காவில் நடைபெற்ற மெட் காலா பேஷன் ஷோ 2024..!!